கவிதை ஒன்றுகூடல் உரையாடல் நிகழ்வு இரண்டு




















இடம்: சென்னை AICUF அரங்கம்,

நாள்: 26 ஜுன் 2009, வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை

முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.


பன்முக வாசிப்பு

பெயல் மணக்கும் போது - அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம் - அனார்
செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி
மனோன்மணி

இருள் யாழி - திருமாவளவன்
யாழன் ஆதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை - த. அகிலன்
சுகுணா திவாகர்

புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன - மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள் - இளங்கோ
சோமிதரன்


கருத்தாளர்கள்
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கருணாநிதி ‘துரோகி’யான கதை
















உன்னதம் ஜூன் மாத இதழில் வெளிவந்த சில்வியா குண்டலகேசி என்பவரின் கட்டுரையிது. பொதுவாக ‘கருணாநிதி தமிழினத்துரோகியாக மாறிவிட்டார்’ என்றும் ‘திமுக தமிழின விரோதக் கட்சியாக மாறிவிட்டது’ என்றும் குற்றச்சாட்டுகள் வலுக்கும் காலம். ஆனால், இப்படிக் குற்றம்சாட்டுகிற பல ஈழத்தமிழ் நண்பர்களுக்கு திராவிட இயக்கத்தின் கருத்தியல் அடிப்படைகள் குறித்து அவ்வளவாய் அக்கறையில்லை. ஒரு மேலோட்டமான குற்றச்சாட்டை வைப்பதற்குப் பதில், திமுக இன்றைய சூழலில் அடைந்திருக்கும் பண்புமாற்றம் குறித்தும் குறிப்பாக அதன் அடிக்கட்டுமானத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் இந்த கட்டுரை உரையாடலுக்கான சில புள்ளிகளை வனைந்துள்ளது என்பதால் இதைப் பதிவிடுகிறேன். நன்றிகள் சில்வியாகுண்டலகேசிக்கும் உன்னதம் இதழுக்கும்.


அடிப்படைகளின் மரணம் : மாறிப்போன திராவிட இயக்க அரசியல் போக்குகள்



நடந்துமுடிந்த 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் சற்றே மிதவாத இடதுசாய்வுச் சிந்தனையாளர்களிடம் இரு பாரிய அதிர்ச்சிகளை உண்டுபண்ணியது.

1. ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்குத் துணைபோன திமுக & காங்கிரசுக்கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

2. அப்பட்டமான அமெரிக்கச்சார்பு எடுத்து உலகமயமாக்கல் கொள்கைகளைத் தீவிரமாய்த் தொழிற்படுத்திய காங்கிரசுக்கட்சி முன்னைவிட வலிமையுடன் வென்றது.

பகுத்தறிவு, சமதர்மம், பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வு ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் தமக்கான அரசியலைக் கட்டமைத்தவர்களில் பெரும்பாலானோர் இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வேண்டிய ‘சங்கடத்திற்கு’ உள்ளானார்கள். இதுவரை மார்க்சிய & லெனினியம் உட்பட தீவிர அதிகார எதிர்ப்பு அரசியல் பேசி வந்தாலும் இவர்களில் பலர் ஓட்டரசியல் என்று வரும்போது திமுகவையே ஆதரிப்பது என்னும் நிலைப்பாட்டையே கையெடுத்தவர்கள். ஆனால் முதன்முறையாக, திமுகவிற்கு எதிராக, அதுவும் இரட்டை இலைக்கு ‘கைநடுங்கியபடி’ வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சூழல் உருவாக்கியது.. திமுக இத்தகைய ஒரு வாக்குவங்கியை இந்த தேர்தலில் இழந்தது. என்றபோதும் திமுக வென்றது என்றால் இந்த வாக்குவங்கி தீர்மானகரமான வாக்குவங்கியே அல்ல என்பதுதான் எதார்த்தம்.

தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றதற்குப் ‘பணநாயகம்’தான் காரணம் என்பதற்கு விரிவான ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஆனால் இந்தியா முழுவதும் இதையே காரணமாக நம்மால் முன்வைக்க முடியாது, அது சாத்தியமுமில்லை என்றபோது, காங்கிரசு வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்? எதிர் அரசியல் சக்திகள் இந்தியா முழுவதும் பலவீனமடைந்துள்ளார்களா? தமிழகத்தில் மாற்று அரசியல் சக்திகளின் பலம் என்ன, எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளை முன்னெழுப்பிப் பேச வேண்டிய தருணம். அதன் தொடக்கங்களில் ஒன்றாக ஒரு மகத்தான சமூக ஜனநாயக இயக்கமாக மலர்ந்த திராவிட இயக்கத்தின் அரசியல் பாதைகளில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள், அவற்றின் போக்குகள், வெற்றி மற்றும் தோல்விகள், அவற்றிற்கான சமூக, அரசியல், பொருளாதாரச் சூழற்பின்னணிகள் ஆகியவை குறித்து விரிவாகப் பயில வேண்டியது அவசியம். குறிப்பாக திமுக தற்சமயம் அடைந்திருக்கும் பண்புமாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய சூழலில் மிகமுக்கியமாகிறது.

ஈழப்பிரச்சினையையட்டி திமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள், கருணாநிதியின் கூற்றுகள் மற்றும் செயல்பாடுகளைக் கூர்மையாக அவதானித்திருந்தால் ஒரு அற்புதமான கணத்தைக் கண்டடைய முடிந்திருக்கும். ஆனால், தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக இயங்கும் சிறு சிறு குழுக்களின் கவனத்திலிருந்து அந்த கணம் பதியாமல் போனதும் கைநழுவிப் போனதும் வரலாற்று வினோதம்தான்.

ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள், புதிய அமைப்பு தொடக்கம், உண்ணாவிரதம், ஒருநாள் வேலை நிறுத்தம் எனப் பலவற்றையும் தமிழ்ப்பொதுவெளியில் நிகழ்த்திக் காட்டிய கருணாநிதி ஒருகட்டத்தில் தனது அரசியல் இயலாமை குறித்து பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். ‘‘ஒரு அண்டை நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடிய அளவிற்கோ அதன் அரசியல் போக்கை மாற்றுவதற்கோ/ தீர்மானிப்பதற்கோ மாநில அரசு பலம் வாய்ந்தது அல்ல’’ என்பதுதான் கருணாநிதியின் கூற்றுகளின் சாராம்சம். (ஈழப்பிரச்சினையில், தனக்கும் உணர்வுகள் இருந்தாலும் மாநில அரசின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களால் எந்த சாதனையையும் நிகழ்த்திக்காட்ட முடியாது’ என்பது கருணாநிதி மட்டுமில்லாது அன்பழகன் உள்ளிட்ட பல திமுக முன்னோடிகளால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட கூற்று)

‘‘ஈழத்தந்தை செல்வா காலத்தில் செல்வநாயகம் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வந்தார். ஆனால் அப்போதே பெரியார், ‘ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்?‘ என்று கேட்டார்’’ என்று தனது இயலாமைக்கான சாட்சியமாகப் பெரியாரை முன்னிறுத்தினார் கருணாநிதி. ‘பெரியார் அதிகார மய்யங்களில் அமர்ந்தவர் அல்ல. அவர் சமூகப்போராட்டம் நடத்திய அரசியல் ஆளுமை. அதிகார மய்யங்களிலிருந்து விலகி, ஆனால் மய்யங்களை அழுத்தப்படுத்தவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன. மேலும் அவர் இந்தியத் தேசியக் கட்டமைப்பிலிருந்து விலகிய தனித்தமிழ்நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டவர். ஆனால் கருணாநிதியோ அதிகார மய்யத்தில் பங்குபற்றிய மனிதர். இந்தியத் தேசியத்தோடு கருத்தளவில் முரண்படாத கட்சி அவருடையது. பெரியாரின் நிலையும் கருணாநிதிக்குக் கிடைத்திருக்கும் அதிகாரமும் சமதன்மை வாய்ந்ததுதானா?’’ என்கிற கேள்வி நியாயமாய் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பெரியார் அதிகார மய்யங்களிலிருந்து விலகியிருக்கக் காரணம் அதிகாரமய்யங்கள் கறைபடிந்ததாக இருந்ததால் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் அதிகாரமே அதிகார மய்யங்களிலும் நிலவுவதால் அதிகார மய்யங்களை நோக்கி நகர்வதால் எத்தகைய வலுவான சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது என்று நம்பியதாலும்தான். ஆனால் திமுகவோ, பாராளுமன்றப் பாதையின் வழியாகத் தாம் விரும்பும் சமுதாயத்தைப் படைக்க முடியும் என்று வாதிட்டே பெரியாரியக்கத்தினின்று பிரிந்து வந்தது. ஆனால், ‘தன்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது’ என்று கருணாநிதி வெளிப்படையாக அறிவித்தது, திமுகவின் மகத்தான தோல்வியே என்பதையும் நாம் கவனங்கொள்ள வேண்டும். மேலும் திராவிட நாட்டுக்கோரிக்கையைக் கைவிட்ட திமுக, ‘அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்று முன்னறிவித்த காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன என்பதுதான் கருணாநிதி கூற்றுக்களில் மறைந்திருக்கும் எதார்த்தம்.

இந்தியத் தேசியம் என்னும் பார்ப்பனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட இந்திய தேசம் என்னும் பார்ப்பனக் கட்டமைப்பில் தமது இன உறவுகளைக் காப்பாற்றுவதற்கான அதிகாரம் கூட மாநில அரசுக்கு இல்லை என்று ஒரு மாநில முதல்வரே அறிவித்தபிறகு, அதைச் சாக்காக முன்னிட்டு இந்தியத் தேசியத்தின் கொடூரத்தையும் தனித்தமிழ்நாட்டின் அவசியத்தையும் முன்வைத்து தமிழ்த்தேசிய சக்திகள் ஒரு இயக்கத்தைக் கட்டியிருக்க வேண்டும். ஆனால் மாறாக, ‘‘நாங்கள் இந்தியா உடைவதை விரும்பவில்லை, ஆனால் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்றுதான் மெல்லிய குரலில் முனகினார்கள். பெரியாருடைய இடத்தையும் திமுக கைவிட்ட பிரிவினைக்கோரிக்கைக்கான இடைவெளியையும் இட்டு நிரப்புவதற்குப் பதிலாக தெரிந்தே தவறவிட்ட பாவத்தைச் செய்தவர்கள் தமிழ்த்தேசியவாதிகள்.

’திராவிட இயக்கம்’ என்கிற வரையறை திராவிடர் கழகம் தொடங்கி, திராவிடப் பெயர் தாங்கிய அனைத்துக் கட்சிகளையும் குறிக்கும் விளிப்புச்சொல்லாக ஆய்வாளர் முதற்கொண்டு சாமானியர் வரை பயன்படுத்தப்படுகிறது. பெரியாரியக்கங்களை விட்டுவிடுவோம், மய்யநீரோட்ட திராவிட அரசியற் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் திராவிட இயக்கத்திற்கான அடிப்படைகளை வரையறுத்த, மற்றும் அதைச் செழுமைப்படுத்திப் பேண வேண்டிய அதிகப்பொறுப்பு திமுகவிற்கே உண்டு.

கருத்தியலற்ற மந்தைகளை உருவாக்கியதே எம்.ஜி.ராமச்சந்திரனின் வெற்றியின் அடிப்படை. அது திராவிடக் கட்சிக்கான அடிப்படைகள் என்று எதையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டதுமில்லை, அதனாலேயே சமூக ஆய்வாளர்களாலும் மாற்று அரசியலாளர்களாலும் கருத்தியல் அடிப்படையில் அதிக விமர்சனங்களைச் சந்தித்ததுமில்லை. எம்.ஜி.ஆர் காலம் வரை கருத்தியல் அடிப்படைகளற்ற ஜனரஞ்சக இயக்கமாக இருந்த அதிமுக, ஜெயலலிதா என்கிற பார்ப்பனப் பெண்மணியின் தலைமை தாங்கிய காலத்தின்பின் படிப்படியான வலதுசாரி இயக்கமாக மாறிப்போனது. பார்ப்பன & தேவர் ஆதிக்கசாதிக்கூட்டே அக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் கருத்தியல் கட்டுமானங்களையும் தீர்மானிப்பதாக மாறிப்போனது வெளிப்படை.

ஆனால் திமுகவிற்கு சற்றுக்காலத்திற்கு முன்பு வரை இருந்த பிம்பங்கள் வேறு. படித்தவர்கள் அதிகம் வாக்களிக்கும் கட்சி, முக்குலத்தோர்களால் அதிகம் வாக்களிக்கப்படாத கட்சி, தமிழின உணர்வாளர்களால் ஆதரிக்கப்படும் கட்சி என்ற பிம்பங்கள் கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாக உதிர்ந்து வருகின்றன.

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் ஆதிக்கச்சக்தியாய் முக்குலத்தோர் சாதி வளர்ந்து வருகிறது. இந்த சாதியின் விருப்பத்தேர்வாக எம்.ஜி.,ஆர் காலத்திலிருந்து அதிமுகவே இருந்து வந்தது. ஜெயலலிதா& சசிகலா நட்புறவிற்குப் பிறகு இதன் உச்சம் அதிகரித்தது. மேலும் தேவராதிக்கக் கருத்தியல் பிதாமகனாகிய பசும்பொன் முத்துராமலிங்கம் திராவிட இயக்கத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர். அண்ணா, கருணாநிதி போன்ற எளிய சாதிப்பின்னணி கொண்ட தலைவர்களைப் பொதுமேடையிலேயே சாதிவெறி கொண்டு வசைபாடியவர். திராவிட நாடு கோரிக்கை, தமிழுணர்வு, இந்துமத எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றை மூர்க்கமாக மறுத்தும் எதிர்த்தும் வந்தவர். அவரது மேடைப்பேச்சுகளைப் படித்தால் திராவிட இயக்கத்தின் மீதான அவரது ஆழ்மன வெறுப்பை உணரமுடியும். இதுவும் முக்குலத்தோர் சாதிகள் திமுகவை விலக்கி வைக்க மிக முக்கியமான காரணம்.

ஆனால் தற்பொழுதோ முக்குலத்தோர்கள் அதிகம் நிறைந்த திருமங்கலம் தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணியை வீழ்த்த முடிகிறது, மதுரை உள்ளிட்ட முக்குலத்தோர்கள் அதிகம் நிறைந்த தென்மாவட்டங்களில் அதிமுகவின் இடத்தைத் திமுக கைப்பற்ற முடிகிறது என்றால் அதன் அரசியல்& சமூக அடித்தளம் என்னவாக மாறியிருக்கிறது என்பதுதான் மிக முக்கியமாய் ஆராயப்படவேண்டியது..

பாரதிய ஜனதா கட்சி என்னும் அதிகாரப்பூர்வ இந்துத்துவ அரசியல் கட்சிகளோடு மற்ற தமிழகக் கட்சிகள் எளிதாகக் கூட்டு வைத்துக்கொண்டபோது திமுகவிற்கு இருந்த தயக்கம் நமக்குத் தெரியும். மேலும் பா.ஜ.கவோடு கூட்டு சேர்ந்ததற்காக அதிகம் விமர்சிக்கப்பட்ட திராவிடக் கட்சியும் திமுகதான். ஏனெனில் மிஞ்சியிருக்கிற திராவிட அரசியலின் அடிப்படைகள் திமுகவில்தான் இருக்கின்றன என்றும் அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் மற்றெந்த திராவிடக் கட்சிகளை விடவும் திமுகவிற்குத்தான் உண்டென்றும் நாம் நம்பினோம்.

ஆனால் திராவிட அரசியலுக்கான அனைத்து அடிப்படைகளையும் திமுக இழந்து வருவது மட்டுமில்லாது, அது அதிமுகவின் பண்புகளை உள்வாங்கிக்கொள்ளும் கட்சியாக மாறி வருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருணாநிதியின் அதிகாரப் பசி, குடும்ப அரசியல், ஊழல்மயப்பட்ட தொண்டர்கள் என்பவை இத்தகைய பண்பு மாற்றத்திற்குப் பிரதான காரணங்கள் என்றாலும் இவை மட்டுமே காரணங்கள் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் அயோக்கியத்தனம்..

நாம் முன்பே பேசியபடி உலகமயப் பாதிப்புகள் இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கவில்லை. பிரம்மாண்டமான ஆண்குறியென கட்டமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சியடைந்ததும் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்ததும் காங்கிரசு ஆட்சியில்தான். ஆனால் காங்கிரசு முன்னைவிட வலிமையாக எழுந்துநிற்கிறது. பெயரளவிற்கேனும் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்ட மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் தங்களின் செல்வாக்குப் பிரதேசங்களான கேரளாவிலும் மேற்குவங்கத்திலுமே பலத்த அடி வாங்குகின்றனர்.

தமிழ்நாட்டிலோ உலகமய எதிர்ப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமளவிற்கு தேர்தல் இடதுசாரிகள் பலம் வாய்ந்தவர்கள் அல்ல. தலித் அமைப்புகளும் உலகமயத்தை ஏற்று சமரசம் செய்துகொண்டன. இத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டிய வரலாற்றுத் தகுதி திராவிட இயக்கத்திற்கு உண்டு. சமதர்மம் என்கிற சொல்லாடல் தமிழகத்தில் அதிகமாய்ப் புழக்கத்திற்கு வந்தது பெரியாரியக்கத்தால்தான். அண்ணாவின் படைப்புகளிலும் பார்ப்பன எதிர்ப்பை விட பண்ணையார் எதிர்ப்பு விஞ்சி நிற்பதை அவதானிக்க முடியும்.

ஆனால் இடைத்தட்டு சாதிகள் & இடைத்தட்டு வர்க்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக இதுவரை விளங்கிய திமுகவின் தலைமை மற்றும் செல்வாக்குள்ள ஆளுமைகள் இப்போது முற்றிலுமாக மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதிகளாக மாறிப்போயினர். நாகூர் அனிபாவின் மேடைப் பாடல்களிலிருந்து ஜேடி ஜெர்ரி என்கிற தேர்ந்த விளம்பர இயக்குனர்களால் இயக்கப்பட்டதாக திமுகவின் பிரச்சார உத்தி இந்த தேர்தலில் மாறிப்போனது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

திமுக இதுவரை பேசிவந்த மொன்னையான கம்யூனிசத்தையும் அது கைகழுவிவிட்டது. அதன் சமூக அடித்தளங்களாக இடைநிலைச் சாதிகளும் ( இதுவும் கூட மென்மையான, குறைந்தளவிலான அதிகாரம் கொண்ட இடைநிலைச்சாதிகள் அல்ல, ஒரு வலிமையான அதிகார மய்யமாகத் திடப்பட்டிருக்கிற, வன்முறை மூலம் தமக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்கிற இடைநிலைச்சாதிகள்) அதிகாரத் தொடர்புகளாகவும் பங்காளிகளாகவும் பார்ப்பன மற்றும் உயர்சாதியினரைக் கொண்டிருக்கிற கட்சியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்கிற வடவரெதிர்ப்பு முழக்கத்தை முன்வைத்த திமுகவின் தலைவர் கருணாநிதி, ‘வடக்கு வழங்குகிறது, தெற்கு வாழ்கிறது’ என்று சோனியாகாந்தி கலந்துகொண்ட கூட்டத்திலேயே பகிரங்கமாகப் பேசினார். தமிழ், தமிழுணர்வு ஆகிய விஷயங்களைக் கூட இப்போது கருணாநிதி அவ்வப்போது ரகசியமான குரலில்தான் பேசி வருகிறார். நாத்திகம் மாதிரியான விஷயங்கள் திமுகவிடமிருந்து எப்போதோ விடைபெற்றுக்கொண்டது. குறைந்தபட்சம் இதுமாதிரியான திமுகவின் அடிப்படை விஷயங்களைப் ‘பேசக்கூடிய நபராக’ கருணாநிதி இருக்கிறார் என்பதே திராவிட இயக்கம் என்ற பெயருக்கான கடைசி மரியாதையாகவும், திராவிட இயக்கச்சார்பு கொண்ட தமிழுணர்வாளர்களின் எஞ்சி நிற்கும் ஆறுதலாகவும் இருக்கிறது பரிதாபத்திற்குரிய உண்மை.

பெயரளவிற்கேனும் இருக்கிற கருத்தியல் அடிப்படைகளையும் ‘ஊத்திமூடி’ இப்போது ‘எல்லோருக்குமான’ ஜனரஞ்சகக் கட்சியாக மாறியிருக்கிற திமுக, கருணாநிதிக்குப் பிறகு கருத்தியல் அடிப்படைகள் ஏதுமற்ற, எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பற்ற தலைமைகளால் வழிநடத்தப்படும்போது அது வெகுவிரைவில் ஒரு வலதுசாரிக்கட்சியாக மாறிவிடுகிற அபாயமிருக்கிறது.

திமுக இப்போதெல்ல்லாம் அதிகம் ஊர்வலங்கள், மாநாடுகளை நடத்துவதில்லை. எழுச்சிமிக்க முழக்கங்களை முன்வைப்பதுமில்லை. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திமுக ஊர்வலங்களில் முன்வைக்கப்பட்ட அய்ம்பெரும் முழக்கங்களை முன்வைத்து இன்றைய திமுகவின் நிலையையும் வாசகர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.

அண்ணா வழியில் அயராதுழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி!

இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான அருந்ததிராயின் குரல்




இலங்கையில் இன்று பெருகி வரும் பயங்கரத்தை அதைச் சுற்றியுள்ள மௌனமே சாத்தியப்படுத்துகிறது. மய்ய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும் இதுகுறித்து செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வருவதில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்பது ரொம்பவும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. கொஞ்சநஞ்சமாய்க் கசிந்துவரும் செய்திகளிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில் ’பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்கிற பிரச்சாரத்தை இலங்கை அரசு தன் அம்மணத்தை மறைத்துக்கொள்ள கோவணத்துணியாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதுதான். அந்த நாட்டில் எஞ்சியுள்ள கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் இன்று அழித்து தமிழ் மக்களின் மீது சொல்லொணாக்குற்றங்களைப் புரிவதற்கு இந்தப் பிரச்சாரத்தை அது பயன்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு தமிழரும் தன்னை வேறுவகையில் நிறுவிக்கொள்ளாதவரை ஒரு பயங்கரவாதியாகவே கருதப்படவேண்டும் என்கிற ‘கொள்கை’யுடன் செயல்படும் இலங்கை அரசு குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வதிவிடங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும் குண்டுகளைப் பொழிந்து அவற்றையும் போர்க்களமாக மாற்றியுள்ளது. நம்பத்தகுந்த மதிப்பீடுகளின்படி இன்று போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலுள்ளது. டாங்குகள், போர்விமானங்கள் சகிதம் இன்று இலங்கை ராணுவம் முன்னேறிக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக குடியமர்த்துவதற்கென வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் பல ’பொதுநலக் கிராமங்களை’ நிறுவியிருப்பதாக அரசுத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியின்படி (பிப் 14, 2009) ‘‘போரிலிருந்து தப்பி ஓடிவரும் பொதுமக்களைக் கட்டாயமாகப் பிடித்து வைக்கும் மய்யங்களாக’’ இந்த கிராமங்கள் செயல்படுமாம், அரசுக்குப் பிடித்தவர்களை ஒதுக்கிக் குடியமர்த்தும் சிறைமுகாம்களுக்கான இன்னொரு பெயரா இது? இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழிடம் பேசும்போது, ‘பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கை அரசு கொழும்பிலுள்ள தமிழர்கள் எல்லோரையும் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. 1930களில் நாஜிகள் செய்தத்துபோல் இதுவும்கூட வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அடிப்படையில் அவர்கள் எல்லாத் தமிழ்மக்களையும் சாத்தியமான பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்போகிறார்கள்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளைத் ‘துடைத்தெறிவது’ என அது அறிவித்துக்கொண்டுள்ள குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாறு பொதுமக்களையும் ‘பயங்கரவாதிகளையும்’ ஒன்றாக்கும் இச்சதியின் மூலம் இறுதியில் இனப்படுகொலையாக முடியக்கூடிய ஒரு செயலைச் செய்து முடிக்கும் எல்லைக்கே இலங்கை அரசு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஐ.நா அவையின் மதிப்பீடு ஒன்றின்படி ஏற்கனவே அங்கு பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இன்றும் பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். நேரடியாகப் பார்த்த சிலரின் கூற்றுகள் நரகத்திலிருந்து எழுகின்ற ஒரு கொடுங்கனவின் விவரணமாக அமைந்துள்ளன. இலங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, ஆனால் ரொம்பவும் வெற்றிகரமாய் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்ற இக்கொடுமைகளை அப்பட்டமான, வெளிப்படையான இனவாதப் போர் எனச் சொல்லலாமா? எந்தவிதமான கண்டனங்களுக்கும் ஆட்படாமல் இலங்கை அரசு இந்தக்கொடுமைகளைச் செய்துவர முடிந்துள்ள நிலை அதனுள் ஆழமாகப் பதிந்துள்ள இனவாதப்பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது. இதுவே இலங்கைத்தமிழ் மக்கள் அன்னியப்பட நேர்ந்ததற்கும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் தொடக்கமாக அமைந்தது. சமூகவிலக்கு, பொருளாதாரத்தடை, படுகொலைகள், சித்திரவதைகள் என இந்த இனவாதத்திற்கு ஒரு ஒரு நீண்ட வரலாறுண்டு. அமைதியான, வன்முறையற்ற போராட்டமாகத் தொடங்கிய ஒன்று கொடூரமான பண்புகளுடன் கூடிய ஒரு நீண்ட சிவில் யுத்தமாக மாறியதன் வேர்கள் இங்குதான் உள்ளன.

ஏனிந்த மவுனம்? இன்றைய இலங்கையில் சுதந்திரமான ஊடகம் என ஒன்று இல்லை என இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

சமூகத்தை ‘அச்சத்தில்’ உறைய வைத்துள்ள கொலைப்படைகள் குறித்தும் ’வெள்ளைவேன் கடத்தல்கள்’ குறித்தும்கூட சமரவீர கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு எதிர்ப்புக்குரலை ஒலித்த பலர், கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் வாயை அடைப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்கள், காணாமல் போகடித்தல், படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்துவதை ’பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ வன்மையாகக் கண்டித்துள்ளது.

மனித சமூகத்திற்கு எதிரான இந்தக் கொடுமைகளில் இலங்கை அரசுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகளையும், பக்க ஆதரவுகளையும் இந்திய அரசு வழங்கி வருவது குறித்து வேதனைக்குரிய ஆனால் உறுதி செய்யப்பட இயலாத தகவல்கள் நிலவுகின்றன. உண்மையாயின் இது மிகவும் மூர்க்கத்தனமான கொடுமை. மற்ற அரசுகளின் நிலை என்ன? பாகிஸ்தான்? சீனா? இந்த நிலையை மட்டுப்படுத்தவோ அதிகரிக்கவோ அவை என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் இந்தப் போரினால் தூண்டப்பட்ட உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தீயில் மாய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கோபமும் துயரும் இன்று ஒரு தேர்தல் பிரச்சினை ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபம், துயர் ஆகியவற்றில் பெரும்பகுதி உண்மையில் தன்னிச்சையாக உருவானவை என்றபோதிலும் ஒருபகுதி தந்திரமான அரசியல் நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்டதாகும்.

எனினும் இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளைச் சென்றடையாதது வியப்பூட்டுகிறது. ஏன் இங்கு இந்த மௌனம்? இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் நிச்சயமான இங்கே ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ இல்லை. இலங்கையில் நடைபெறும் வன்முறைகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மவுனம் மன்னிக்கக்கூடியதல்ல. முதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது, அப்புறம் இன்னொரு தரப்பை ஆதரிப்பது என்கிற வகையில் இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் பொறுப்பற்ற தலையீடுகளின் நீண்ட வரலாறு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. முன்னதாகவே பேசியிருக்க வேண்டிய நான் உட்பட எங்களில் பலர் அப்படிச் செய்யாமல் போனதற்குக் காரணம் இந்தப் போர் குறித்த முழுத்தகவல்களும் எங்களுக்குக் கிடைக்காமல் போனதே.

ஆக படுகொலைகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில், பத்தாயிரக்கணக்கானோர் சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பசியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு இன அழிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில் இந்த நாட்டில் (இந்தியாவில்) ஒரு மரண அமைதி நிலவுகிறது. இது ஒரு மாபெரும் மனிதசோகம். உலகம் இதில் தலையிட வேண்டும். இப்போதே....எல்லாம் முடிந்து போவதற்கு முன்பே.

சில குறிப்புகள் :


* அருந்ததிராய் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு’வினரால் அச்சடித்து வினியோகிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக மார்ச் 30, 2009 அன்று மாலை லயோலா கல்லூரியில் இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. தோழர்.அ.மார்க்ஸ், இலங்கை அய்க்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜெயசூர்யா, டெல்லி பத்திரிகையாளர் சத்தியா சிவராமன், தமிழீழப் போராட்டக்குழுவைச் சேர்ந்த சுதாகாந்தி ஆகியோர் பேசினர். அருந்ததிராய் கட்டுரையின் ஆங்கில மூலத்தைத் தோழர் வ.கீதா வாசித்தார். சத்தியா சிவராமனின் பேச்சைப் பேராசிரியர் சிவக்குமாரும் ஜெயசூர்யாவின் பேச்சைத் தோழர் தியாகுவும் தமிழில் மொழிபெயர்த்தனர். ஏப்ரல் 8 அன்று சென்னை உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளது.

* அருந்ததிராய், தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மக்களின்பால் நிற்கக்கூடியவர். அதற்கான போராட்டங்களில் தன்னை பங்குபற்றிக்கொண்டவர். ஆனால் ஈழப்பிரச்சினை குறித்த அவரது ’மவுனத்தின்’ அடிப்படையில் மட்டும் அவரைக் கீழிறக்குவது என்பது துரதிர்ஷ்டவசமானது. புலிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் இனப்படுகொலை தொடர்பான விபரங்களை எந்த அளவிற்கு அறிவுஜீவிகளிடமும் மனித உரிமைப் போராளிகளிடமும் கொண்டு சேர்த்தனர் என்கிற கேள்வி இங்கு முக்கியமானது. மேலும் உலகமெங்கும் ஆங்காங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காய்ப் போராடிக்கொண்டிருக்கும் புரட்சிகர இயக்கங்களோடும் ஜனநாயகச் சக்திகளோடும் புலிகள் இயக்கம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என்னவிதமான உரையாடல்களை இதுவரை நிகழ்த்தியிருக்கிறார்கள்? இறுக்கமான மூடுண்ட அமைப்பாய்த் திகழும் விடுதலைப்புலிகள் இதுவரை தமிழகத்து ‘சவடால் அரசியல்வாதிகளையும்’ இந்திய மய்ய அரசின் கருணைப்பார்வையையும் மட்டும் நம்பியிருப்பது யார் தவறு என்கிற கேள்விகளையும் வரலாற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்க வேண்டும்.

* ‘ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி’ என்ற பெயரில் ஜனநாயகச்சக்திகளின் மீது அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம். அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் ‘என்றென்றும் அன்புடன்’ பாலா எழுதுவது அதற்கு ஒரு உதாரணம். அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்? சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள், ‘அருந்ததிராய் ‘பப்ளிசிட்டிக்காக’ மட்டுமே பேசுவார்’ என்று அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதேபோலவே புலிகளின் மீதான விமர்சனத்தோடேயே ஈழமக்களின் பிரச்சினைகளைப் பேசும் சுகன், ஷோபாசக்தி, அ.மார்க்ஸ், ரயாகரன் என மாற்றுக்குரலை முன்வைக்கும் அனைவரையும் ரா ஆட்கள், கருணா ஆதரவாளர்கள், இலங்கை அரசை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அவதூறு பரப்புவது, அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் நியாயங்களைக் கூட பரிசீலிக்க மூர்க்கமாய் மறுப்பது ஆகியவை இன்று இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சினையை அரசியல் ஆதாயமாக மாற்றி அதற்குத் துரோகம் செய்துள்ள நெடுமாறன் உள்ளிட்ட கருங்காலிகளை விமர்சிப்பதை விட மேற்கண்ட ஜனநாயகச் சக்திகளைக் காய்வதே அதிகமாய் நடக்கிறது. துரோகி பட்டம்தான் நமக்கு வாரி வழங்குவதற்கு ஏகப்பட்ட கையிருப்பு உள்ளதே! உலகமயமாக்கல், இந்துத்துவ வன்முறைகள், தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், சமீபகாலமாய் பெண்களின் மீது அதிகரித்து வரும் கலாச்சாரப் பாசிஸ்ட்களின் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களே ஈழப்பிரச்சினை குறித்தும் விமர்சனபூர்வமான போராட்டங்களில் பற்றி உறுதியாய் நிற்கின்றனர். வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் ‘திடீர்’ ஈழ ஆதரவாளர்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது பார்ப்பன தேசம்

மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர் சங்கமொன்று இலங்கைத் தூதரகத்தின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிங்களக்கொடியையும் ராஜபக்சேவின் உருவப்படத்தையும் எரித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வெளியானது. ‘உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல்‘ என்று. நீதிமன்றத்தின் வாயில் முன்பு முன்னூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ‘பத்திரிகையாளர்கள்‘ என்று சொல்லாவிட்டால் அந்த வேட்டைநாய்களின் தடியடிக்கு இரையாவதிலிருந்து தப்பியிருக்க முடியாது. சுற்றிலும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை அடிக்கடி அடித்துக் கலைப்பதும் மக்கள் திரள் கலைந்து ஓடுவதுமாக ஒரே அமளிதுமளி. திடீரென்று நீதிமன்றத்தில் அடித்து நொறுக்குகிற ஓசை. காம்பவுண்ட் சுவர் வழியாக எட்டிப் பார்த்தால் வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தது போலீசு. சட்டம் ஒழுங்கை வழக்கறிஞர்கள் கெடுத்தார்கள் என்றுதான் தாக்குதல் என்றால் கார்க்கண்ணாடிகள் என்ன செய்தன? ஒருவழியாகப் போலிசின் வெறியாட்டம் நடந்து முடிந்து கமிஷனர் பேட்டிச்சம்பிரதாயமும் முடிந்து திரும்பும் வேளை. குடும்பநல நீதிமன்றத்தின் மொட்டைமாடியில் கால் உடைந்து ‘காப்பாற்றுங்கள்‘ என்று கதறிக்கொண்டிருந்தார் வழக்கறிஞர் ஒருவர். பத்திரிகையாள நண்பர்களும் பொதுமக்களும் ஒருவழியாக அவரைக் காப்பாற்றி இறக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினோம். ஆனால் இன்றைய தினத்தந்தியில் செய்தி வந்திருக்கிறது ‘அந்த வழக்கறிஞரைக் காப்பாற்றியது போலிசும் நீதிமன்றப் பணியாளர்களும்’ என்று.

எப்போது பார்த்தாலும் ‘பார்ப்பானைத் திட்டுகிறீர்களே’ என்று கேட்கும் நண்பர்களே, இப்போது சொல்லுங்கள். ‘யாருமே இல்லாத டீக்கடையில் டீ பார்ட்டி நடத்துகிற’ அரசியல் அனாதை சூனாசாமிக்கு ஆதரவாகத்தானே நடந்தது வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் படலம்? ஆள்பலம் இல்லாத சு.சாமியால் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவர் கருணாநிதியை இயக்க முடிகிறதே! (இவ்வளவு பிரச்சினைக்களுக்கு மத்தியில் காந்திகண்ணதாசனுக்குக் கடிதம் எழுதுகிற கருணாநிதியை என்ன செய்வது?)

‘இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனத் தேசியம்’ என்கிற புரிதல் பெரியாருக்கு இருந்ததால்தான் அவரால் பிரிவினைக் கோரிக்கையை முன்வைக்க முடிந்தது. இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனியக் கருத்தியல், இந்தியத்தேசம் என்பது பார்ப்பனியக் கட்டமைப்பு. அதன் கருத்தியல் நிறுவனங்கள்தான் மத்திய அரசும் மாநில அரசுகளும். அந்த நிறுவனங்களின் எடுபிடிகளில் ஒருவர்தான் ‘சூத்திரத்தலைவர்‘ கருணாநிதி. இப்போது மக்கள் எழுச்சி இருக்கிறது, கனவாய், பழங்கதையாய் மங்கிப்போயிருந்த போராட்ட உணர்வு எழுந்திருக்கிறது. மறுபுறம் ரத்தப்பசியோடு ஆளும் நிறுவனங்களும் அதிகார வர்க்கமும் தயாராகவே இருக்கின்றன, இல்லாமல் போனதெல்லாம் ‘பெரியார்’ மட்டுமே.

ஈழத்தமிழர்களுக்காகப் பெரியகுளத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் அரளி விதையை அரைத்துக்குடித்தனர்.

கடைசியாக வந்த தகவல் இது. அவர்களின் நிலை இப்போது என்னவென்று தெரியவில்லை. துரோகி கருணாநிதி அரசின் போலீசு மற்றும் சட்ட ஒடுக்குமுறை ஒருபுறம், தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை மூடி மறைப்பதில் சன் டிவி, கருணாநிதி டி.வி, ஜெயா டிவி என கைகோர்த்து நிற்கும் மீடியா துரோகம் மறுபுறம் என அத்தனையும் தாண்டி ஆங்காங்கு ஈழப்போருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. கருணாநிதியே இன்னும் எத்தனைத் தமிழர்களைப் பலி வாங்கக் காத்திருக்கிறாய்?

தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.

வலைப்பதிவுத் தோழர்களே!

ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி

இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.


மேலும் தொடர்புகளுக்கு : 9841354308, 9840903590, 9790948623.

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

ஈழப்பிரச்சினை : கருணாநிதி மட்டும்தான் துரோகியா?

ஈழத்துப் போர்ச்சூழல்கள் மென்மேலும் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலில் குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத அரசால் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் வெறுமனே உணர்ச்சிவசப்படுதலோ மய்யநீரோட்ட அரசியல் அடிப்படையிலான கருத்துப்போர்கள் மட்டுமே தீர்வாகாது. மாறாக, இன்றைய எதார்த்தநிலைமைகள் குறித்த அவதானிப்பு நமக்கு அவசியமாகிறது.

'கிளிநொச்சி வீழ்ந்ததற்கே கருணாநிதிதான் காரணம்' என்கிற வகையிலான இணையப்பதிவுகள் நகைப்புக்குரியன. இதனாலேயே கருணாநிதி ராஜினாமா செய்யவேண்டும், அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்கிற கோபப்பதிவுகளின் நியாயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறதென்றாலும் இன்றுள்ள சிக்கல்களுக்குக் கருணாநிதி மட்டுமே காரணமில்லை என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் உணரமுடியும். மேலும் ஈழப்பிரச்சினையில் மட்டும்தான் கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகமிழைத்தாரா என்ன? காவிரிப்பிரச்சினை தொடங்கித் தமிழகத் தமிழர்களின் பல்வேறு வாழ்வாதாரப்பிரச்சினைகளிலும் கருணாநிதி அவ்விதமே செயல்பட்டு வந்திருக்கிறார். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டத்தை ஓராண்டாகக் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது ஆளுநர் உரையில் மீண்டும் ஒகேனக்கல் திட்டம் குறித்து பூச்சாண்டி காட்டிவருகிறார். இப்போது கருணாநிதி தமிழினத்திற்கு இழைத்துள்ள துரோகங்களின் எண்ணிக்கை ஒன்று கூடியிருக்கிறதே தவிர வேறல்ல.

மேலும் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மட்டுமல்ல, அவரளவிற்குச் சமரசங்களையும் துரோகங்களையும் பின்னடைகளையும் நிகழ்த்திக்காட்டியதில் பிரபாகரனும் சளைத்தவரில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கருணாநிதி மட்டும்தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகவும் பிரபாகரன் சமரசமற்ற போராளி என்பதுபோலவும் வரைந்துகாட்டப்படும் சித்திரங்கள் கேலிச்சித்திரங்களே. ஒருவேளை நாளை ஈழத்தில் முற்றாகப் புலிகள் சிங்கள அரசால் ஒழிக்கப்படுவார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஈராக்கில் அமெரிக்க வல்லாதிக்கத்தால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது ஈராக்கில் பெரிய அளவில் ஆயுதத் தாங்கிய போராளிக்குழுக்கள் இல்லை. ஆனாலும் மக்களே தன்னெழுச்சியாக அமெரிக்க மற்றும் அதன் நேசநாடுகளின் ராணுவத்திற்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை நிகழ்த்தி வந்தனர், வருகின்றனர். ஆனால், நாளை புலிகள் இல்லாத சூழலில் ஈழத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்கள் நிகழுமா? புதைப்பது, விதைப்பது என்கிற வீரவசனப் படங்காட்டுதலைத் தள்ளிவைத்துப் பார்த்தால் அப்படி நடப்பதற்கான எந்த சாத்தியங்களுமில்லை என்பதே எதார்த்தம். மலையகத்தமிழர், முஸ்லீம்கள் ஆகியோரை ஈழப்போராட்டத்தினின்று ஒதுங்குவதற்கு/ஒதுக்குவதற்கான சூழலை உருவாக்கியது யார்? எண்ணற்ற போராளிக்குழுக்கள் அழிந்துபோனதும் பேரினவாத அரசின் கைக்கூலிகளாகவும் மாறிப்போனது யாரால்? இத்தகைய கேள்விகளையும் சேர்த்தே நாம் யோசிக்க வேண்டும்.

மேலும், இன்றைக்குக் கருணாநிதிக்கு இருக்கும் மிக முக்கியமான சிக்கலான ராஜீவ் கொலையை நிகழ்த்தி அத்தகைய சிக்கலை உருவாக்கியதும் புலிகள்தான். (இதன் அர்த்தம் ராஜீவ் ஒரு புனிதமான மனிதர் என்பதோ அவர் கொலை தவறு என்பதோ அல்ல). மேலும் புதியபோராளி என்னும் மார்க்சிய லெனினிய இதழில் தோழர் சமரன் எழுதியிருப்பதைப் போல புலிகள் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து நிற்பதும் வேறு நாடுகளோடு எவ்வித உறவுகளையும் வளர்த்துக்கொள்ளாததும் அறிவீனமான செயல். இப்போது ஒபாமாவை எதிர்பார்த்து புலிகள் இயக்கம் நிற்பதாய்த் தெரிகிறது. இது மேலுமொரு ‘கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிதலைப்‘ போன்றதே. நிச்சயமாக நாளை தமிழீழம் அமைந்தாலும் அது அமெரிக்க ஆதரவு நாடாகத்தான் இருக்கும் என்பதும் கியூபா, நேபாளம் போலவோ அல்லது குறைந்தபட்சம் வெனிசுலா போலவோ குறைந்தபட்ச ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை அற்ற நாடாகக் கூட இருக்காது என்பது வெளிப்படையான உண்மை.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் விட்டுவிடுவோம். தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கு வருவோம். சி.பி.அய் முதன்முதலாக ஈழப்பிரச்சினை குறித்துப் பேசத்தலைப்பட்டதே கூட்டணியை உருவாக்க முயல்கிற சாதுர்யத்தின் அடிப்படையிலேயே. அதுவும் இப்போது தா.பா தலைமையிலான சி.பி.அய் மய்யநீரோட்ட வலதுசாரிக்கட்சியான அதிமுகவோடு நெருக்கம் காட்டுவது மிகவும் ஆபத்தான ஒன்று. அதிமுக வெளிப்படையான தேவர் ஆதரவுக்கட்சி. தா. பாவோ ஒரு ‘கம்யூனிஸ்ட்‘ ஆகக் காட்டிக்கொண்டாலும் அகமுடையார் சங்கவிழாவில் கலந்துகொண்டவர். எனவே சி.பி.அய் & அதிமுக கூட்டு என்பதே பார்ப்பன & தேவர் கூட்டுதான். இன்னொருபுறம் சி.பி.எம் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலேயே திமுகவை விட்டு வெளியேறியது. ஆனால் பகிரங்கமாக அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் விஜயகாந்தை கூட்டணிக்காக வெட்கமின்றிச் சந்தித்தது. இப்படித்தான் முன்பு எம்.ஜி.ஆரை வளர்த்துவிட்டதில் சி.பி.எம் கட்சிக்குப் பெரும்பங்குண்டு. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் மாதிரியான கருத்தியல் அடிப்படையற்ற சக்திகளை வளர்த்து விடுவதன் மூலம் எந்நேரமும் அவர்கள் வலதுசாரி சக்திகளோடு உறவு வைத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்கித்தரும் குற்றமும் ‘இடதுசாரி‘களையே சாரும். ‘கருணாநிதி ஏன் மன்மோகன் அரசிலிருந்து விலகவில்லை?‘ என்று கேள்வி கேட்பவர்கள் சி.பி.அய்யும் மதிமுகவும் ஏன் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை என்று கேட்பதில்லை என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

எப்படியிருப்பினும் இன்று திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்று பிரிந்து கிடக்கிற ‘ஈழவிடுதலை ஆதரவாளர்களாக‘க் காட்டிக்கொள்கிற மய்யநீரோட்ட அரசியல் சக்திகள் வலியுறுத்தக்கூடிய ஒரே கோரிக்கை, ‘இந்திய அரசே இலங்கையில் போரைத் தடுத்து நிறுத்து‘. உண்மையில் இது ஒரு அபத்தமான கோரிக்கை. இந்தியா என்பது ஒரு தெற்காசியப் பேட்டை ரவுடி. அதன் ஆதிக்க நலன்களுக்கு இப்போதைக்கு ஏற்றது பேரினவாத அரசு ஆதரவு. மற்றும் இந்திய அரசைப் பின்னிருந்து இயக்கம் ஆளும் வர்க்க முதலாளித்துவச் சக்திகளின் பெரு முதலீடுகள் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவானவை. மேலும் இலங்கை அரசைப் போலவே இந்தியாவும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் சொந்த மக்கள் மீதே அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவிவரும் ஆதிக்க அரசு. ஒரு ஆதிக்க அரசிடம் எப்படி இன்னொரு ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை வைக்க இயலும்?

ஆனால் புலி ஆதரவாளர்களோ இன்னமும் இந்தியாவையே நம்புகின்றனர். அதற்காக பாகிஸ்தான் எதிர்ப்பு, சீன எதிர்ப்பு ஆகியவற்றைப் பேரமாக முன்வைக்கவும் தயங்குவதில்லை. இது ஒரு பச்சைச் சந்தர்ப்பவாதமே. இன்னொரு நகைமுரணையும் யோசித்துப் பாருங்கள். இங்கு புலிகளை ஆதரிக்கும் தமிழ்த்தேசியச் சக்திகளின் எதிரி இந்தியத் தேசியமும் அதன் ஆளும் வடிவமான இந்திய அரசும். ஆனால் புலி மற்றும் புலி ஆதரவாளர்களின் ‘நம்பிக்கை நட்சத்திரம்‘ அதே இந்திய அரசு. அப்படியானால் தமிழீழத்தேசியத்தை முன்வைக்கும் புலிகள் தங்கள் அரசியல் வெற்றிக்காகத் தங்களை ஆதரித்து வரும் தமிழ்த்தேசியச் சக்திகளின் கருத்தியல் அடிப்படைகளைக் காட்டிக்கொடுக்க முனைகின்றனர் என்பதே எதார்த்தம்.

எனவே கருணாநிதி மட்டுமல்ல, சி.பி.அய், ராமதாஸ், மதிமுக, புலிகள், புலி ஆதரவாளர்கள் என அனைவருமே தங்களால் இயன்றவரை ஈழப்போராட்டத்திற்குத் தங்களால் இயன்ற துரோகத்தைச் செய்துவருகின்றனர். ஈழப்போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் தினமலரோடு கருத்தியல் மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணும் காலச்சுவடு, உயிர்மை இதழ்களின் பக்கங்களையும் மேடைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஈழ ஆதரவு தமிழக மற்றும் ஈழ இலக்கியவாதிகள் வரை இந்த துரோகம் தொடர்கிறது. எனவே ஈழப்போராட்டத்தில் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டுமானால் இதுவரையிலான போராட்டம் குறித்த விமர்சனப் பார்வையும் இந்திய அரசின் வர்க்க மற்றும் சாதியக் கருத்தியல் சார்பு/ தன்மை குறித்த கருத்தியல் தெளிவும் அவசியம். இன்று இந்திய அரசை நோக்கி நாம் முன்வைப்பதற்கு இரண்டு கோரிக்கைகளே இருக்கின்றன, ‘‘ இந்திய அரசே இலங்கைப் பேரினவாத அரசிற்கு ஆயுதங்கள் வழங்கித் துரோகமிழைப்பதை நிறுத்து! இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!‘‘

இந்த கோரிக்கைக்கான மக்கள் இயக்கங்களைத் திரட்டுவதே இந்திய அரசின் மீதான நிர்ப்பந்தமாய் மாறும். இல்லாவிட்டால் ‘ஈழத்தில் எத்தனைப் படுகொலைகள் நிகழ்ந்தாலும் ‘தலைவர்‘ பிரபாகரனை மட்டும் பிடிக்கவே முடியாது‘ என்று ‘நம்பிக்கைக்‘கட்டுரைகள் எழுதி ஆற்றுப்படுத்திக்கொண்டு நம்மை நாமே பிரமாதமாய் ஏமாற்றிக்கொள்ளலாம்.